search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் சிறுவன் கொலை"

    கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரமடைந்து 3 வயது சிறுவனை கொன்று பீரோவில் மறைத்து வைத்த பெண்ணுக்கு வேலூர் கோர்ட்டில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள டோபிகானா பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 35) மெக்கானிக். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு தீபக், தினேஷ், ஸ்ரீநாத் என்ற 3 மகன்கள் உண்டு. முரளிக்கும் அதேபகுதியை சேர்ந்த மற்றொரு சுமதி(30) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இந்த சம்பவம் முரளியின் மனைவி சுமதிக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர், தனது கணவருடனான பழக்கத்தை விட்டுவிடுமாறு சுமதியை கண்டித்துள்ளார். இதனால் முரளி அவருடன் பழகுவதை நிறுத்திவிட்டார். இதன் காரணமாக முரளியின் மனைவி சுமதி மீது அந்தப்பெண் ஆத்திரமடைந்தார். மேலும் அவரை பழிவாங்க திட்டமிட்டார்.

    24.10.2014 அன்று முரளியின் இரண்டாவது மகன் தினேஷ்(வயது 3) வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அவனை முரளியின் கள்ளக்காதலி சுமதி தனது வீட்டுக்கு கடத்திச்சென்றார். அங்கு சிறுவன் தினேசின் கை, கால்களை கட்டி, வாயையும் கட்டினார். தொடர்ந்து தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்தார். பின்னர் சிறுவனின் உடலை என்ன செய்வதென்று தெரியாமல் பீரோவில் மறைத்துவைத்து விட்டார். அதில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க மிளகாய் பொடியை தூவினார்.

    இந்த நிலையில் மகனை காணாததால் முரளி மற்றும் உறவினர்கள் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் சிறுவன் தினேசை கொலைசெய்தது பற்றி சுமதி தனது உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டார். உடனே போலீசார் சுமதியின் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது சிறுவன் தினேஷ் கொலை செய்யப்பட்டு பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார், சுமதியை கைதுசெய்தனர்.

    இந்த வழக்குவிசாரணை வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி எஸ்.குணசேகர் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். சிறுவனை கொலை செய்ததற்காக சுமதிக்கு 10 வருடமும், கொலையை மறைத்ததற்காக 3 வருடமும் சிறைத்தண்டனை விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார். ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அ.கோ.அண்ணாமலை ஆஜராகி வாதாடினார்.
    ×